Tuesday, February 20, 2018

காளன் | KALAN KERALA RECIPE IN TAMIL


இதுவும் மோர்க் குழம்பு வகையைச் சேர்ந்ததுதான். ஆனால் ருசி
சிறிது வித்தியாஸப்படும் கேரள வகைச் சமையல்.
குறிப்பாக வாழைக்காய், சேனைக்கிழங்கு சேர்த்துச் செய்யப்படுவது.
அவர்கள் பாணி விருந்து சமையலில் கட்டாயம் இது இடம் பெறும்.
இது மிகவும் வித்தியாஸமான பாணியில் இருக்கும்
என்றுநினைத்திருந்தேன். அப்படி அதிகம் ஒன்றுமில்லை. அல்லது எனக்குத் தெரிந்த பாணி  இதுஎன்று நினைத்துக் கொள்ளுங்கள்.
அதிகம் ஸாமானில்லை. காயும் ஸிம்பிளாக ஒரு வாழைக்காய்,
100 கிராம் சேனைக் கிழங்கு இருந்தால் போதும்.
மற்ற வேண்டிய ஸாமான்கள் பார்க்கலாம்.

தயிர்—-2கப். அதிக புளிப்பு வேண்டாம்.
மிளகாய்—-வற்றல் ஒன்று
பச்சை மிளகாய்—2
மிளகுப்பொடி—கால் டீஸ்பூன் அல்லது மிளகாய்ப்பொடி
சீரகம்—அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—அரை கப்பிற்கு அதிகம்.
ருசிக்கு உப்பு
தாளித்துக் கொட்ட—கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை
தேங்காயெண்ணெய்—1 டீஸ்பூன்
பச்சை கறிவேப்பிலை சிறிது.
பச்சரிசி—கால் டீஸ்பூன்.

செய்முறை
  • காய்களை, ஒரு அங்குல நீளத்திற்கு தோல் சீவி நறுக்கி  சுத்தப்படுத்தி வைக்கவும்.
  • தேங்காய்த் துருவலுடன் அரிசியைப் பிசரி வைக்கவும். அரைக்க எளிதாக இருக்கும்.
  • சிறிது நேரம் கழித்து ,பச்சைமிளகாய்,சீரகம்சேர்த்து தேங்காயை நன்றாக அரைத்து வைக்கவும். மிக்ஸியில்தான்.
  • காயை தண்ணீர் விட்டு மிளகு, அல்லது மிளகாய்ப்பொடி,சிறிது,உப்பு சேர்த்துவேக வைக்கவும்.
  • வேக வைத்த காயை வடிக்கட்டி வைக்கவும்.
  • தயிரைக் கடைந்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும்
  • காயில் சிறிது உப்பு போட்டிருப்பதால் தயிரில் திட்டமாக உப்பைப் போடவும்.
  • காயுடன் சேர்த்து, கடைந்த தயிரைத் திட்டமான தீயில் பால்  பொங்குவது போல ஒருகொதிவிட்டு இறக்கவும். அவசியமானால்
  • சிறிது தண்ணீர் முதலிலேயே சேர்க்கவும்.
  • தேங்காயெண்ணெயில் கடுகு,வெந்தயம்,மிளகாய் வற்றலை  தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • காளன் ரெடி. ஒரு முறை நன்றாகக் கிளறிவிடவும்.
  • சாதத்துடனும், விருப்பமானவற்றுடனும், சேர்த்துச் சாப்பிடலாம்.  பாருங்கள். எப்படி என்று?
  • நான் வெண்டைக்காயை எண்ணெயில் வதக்கிப் போட்டு செய்தேன்.
  • ருசிதான் அதுவும். மிளகுப்பொடிக்கு பதில் மிளகாய்ப்பொடி  சேர்த்தேன். கலர் வந்திருக்கிரது.

SHARE THIS

Author: